search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது
    X

    கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளிக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது

    கள்ளக்குறிச்சி அருகே பணத் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(33). தொழிலாளி. இவரது சகோதரிகள் ஜெயலட்சுமி, சின்னம்மாள். இவர்கள் 3 பேரும் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தனர். 

    அப்போது அய்யப்பன் அவரது தங்கை ஜெயலட்சுமிக்கு ரூ.28 ஆயிரத்தை கடனாக கொடுத்தார். 

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அய்யப்பனும் அவரது சகோதரிகளும் அவர்களது சொந்த ஊரான சிறுமங்கலத்திற்கு வந்தனர். அதன் பின்னர் அய்யப்பன் கடனாக கொடுத்த ரூ.28 ஆயிரத்தை அவரது சகோதரி ஜெயலட்சுமியிடம் கேட்டார். அதற்கு அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதில் ஜெயலட்சுமிக்கும் அய்யப்பனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அய்யப்பனை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை ஜெயலட்சுமி அவரது அக்கா மகன் பாலகிருஷ்ணன்(19) என்பவரிடம் கூறினார்.

    இதை தொடர்ந்து பாலகிருஷ்ணன், அய்யப்பனிடம் சென்று எதற்காக ஜெயலட்சுமியிடம் பணம் கேட்டு தகராறு செய்கிறாய் என்று கேட்டார். இதில் அவர்கள் 2 பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அய்யப்பனின் வயிற்றில் குத்தினர். 

    இதில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே பாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். காயம் அடைந்த அய்யப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    இது குறித்து வரஞ்சரம் போலீசில் அய்யப்பன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
    Next Story
    ×