search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்பத்துக்கு ரூ.1000 பொங்கல் பரிசு- அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியாக உயரும்
    X

    குடும்பத்துக்கு ரூ.1000 பொங்கல் பரிசு- அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியாக உயரும்

    பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு ரூ.1000 கொடுக்கும் பட்சத்தில் நடப்பாண்டில் அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #PongalGift #TNGovt
    சென்னை:

    பொங்கலைக் கொண்டாட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    வருகிற திங்கட்கிழமை முதல் இந்த பணப்பட்டுவாடா தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 2 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1000 கொடுக்கும்பட்சத்தில் தமிழக அரசுக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 20 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    2 வாரங்களுக்கு முன்பு அரிசி, கரும்பு, சர்க்கரை கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.1000 கொடுக்கும் முடிவு அதற்கு பிறகு எடுக்கப்பட்டது.

    தமிழக அரசின் இந்த திடீர் முடிவால் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை கணிசமான அளவுக்கு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நடப்பாண்டில் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 500 கோடியாக இருக்கும் என்று அதிகாரிகள் வரையறுத்துள்ளனர்.


    இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பரிசுத் தொகை திட்டத்துக்காக கிட்டத்தட்ட ரூ.2,277 கோடி செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டில் அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ.20 ஆயிரம் கோடியை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    2016-17ம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ.13 ஆயிரம் கோடியாக இருந்தது. 2017-18ம் நிதியாண்டில் அது ரூ.18,370 கோடியாக உயர்ந்தது. என்றாலும் வருவாய் பற்றாக்குறை, நிதிச்சுமையை சமாளிக்க முடியும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர். #PongalGift #TNGovt
    Next Story
    ×