search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகிழக்கு பருவமழை குறைய காரணம் என்ன? - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி
    X

    வடகிழக்கு பருவமழை குறைய காரணம் என்ன? - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

    கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்றுவிட்டதால் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார். #NorthEastMonsoon #Rain
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை காலம் தமிழகத்தில் முடியும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.



    தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவாக 57 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 11 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.

    இது தவிர 5 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைவாக உள்ளது. 4 மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை குறைவாக மழை பெய்துள்ளது.

    15 மாவட்டங்களில் 1 முதல் 19 சதவீதம் வரை குறைவாக பெய்துள்ளது. பொதுவாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை மிகவும் குறைந்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை இயல்பைவிட 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வழக்கமாக 79 செ.மீ. மழை பதிவாகும் ஆனால் இந்த ஆண்டு 35 செ.மீ. மழையே பதிவாகி உள்ளது.

    வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை.

    கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்றுவிட்டதால் மழை இல்லை.

    பொதுவாக ‘எல்நினோ’ உருவானால் தான் மழை பெய்யும். அது உருவாகாமல் தள்ளி போய்விட்டதும் வானிலை நிகழ்வுகள் சாதகம் இல்லாததும், வடகிழக்கு பருவமழை குறைவுக்கு காரணமாகும்.

    இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது தவறாகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #NorthEastMonsoon #Rain
    Next Story
    ×