search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் சிகிச்சைக்கு 3 டாக்டர்கள் தலைமையில் குழு
    X

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் சிகிச்சைக்கு 3 டாக்டர்கள் தலைமையில் குழு

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் சிகிச்சைக்கு 3 டாக்டர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. #HIV #HIVBlood #Pregnantwoman

    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி இந்த மாத தொடக்கத்தில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று இருந்தார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இந்த குறைபாட்டை நீக்குவதற்கு உடலில் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று கர்ப்பிணி பெண்ணிடம் தெரிவித்தனர். அந்த பெண்ணின் ரத்த வகை ‘ஓ பாசிடிவ்” ஆகும். சிவகாசி அரசு மருத்துவ மனையில் இருந்து அந்த ரத்தம் பெறப்பட்டது. கடந்த 3-ந்தேதி இந்த ரத்தத்தை அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றினார்கள்.

    மறுநாள் அந்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வாந்தி-வயிற்று போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. உடனடியாக அந்த பெண்ணை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

    8 மாத கர்ப்பமாக இருந்ததால் அந்த பெண்ணுக்கு சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு ரத்தத்தில் எச்.ஐ.வி. கலந்து இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அந்த பெண்ணின் ரத்தத்தில் மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தம் செலுத்தப்பட்ட பிறகு தான் இந்த பிரச்சினை வந்து இருப்பது உறுதியானது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் கமுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரால் தானம் செய்யப்பட்டதாகும். அவர் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி இந்த ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனையில் தானம் செய்து உள்ளார்.

    2016-ம் ஆண்டு முதல் இவர் ரத்த தானம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையில் அவரது ரத்தத்தை சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் எடுத்து சேமித்து வைத்து உள்ளனர். அதை சிவகாசி ஆஸ்பத்திரிக்கு கொடுத்துள்ளனர். அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை பாதிப்பும் இருந்தது.

     


    சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்களும், ஊழியர்களும் அந்த ரத்தத்தை பரிசோதனை செய்து பார்க்கவில்லை. பரிசோதனை செய்யாமலேயே நம்பிக்கையின் அடிப்படையில் அந்த ரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தி விட்டனர்.

    இந்த தகவல்கள் அம்பலமானதும் எச்.ஐ.வி.யுடன் மஞ்சள் காமாலை கலந்த ரத்தத்தை பெற்ற கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது. நேற்று காலை முதல் அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே கர்ப்பிணி பெண் நேற்று மதியம் புகார் அளிக்க குடும்பத்துடன் சாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அலட்சியமாக செயல்பட்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்துள்ளது.

    டாக்டர்கள், ரத்த வங்கி ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அப்பாவி ஏழை பெண்ணுக்கு எச்.ஐ.வி. கலந்த ரத்தம் செலுத்தப்பட்டது தமிழ்நாடு முழுவதும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பெண்ணை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள்.

    அந்த பெண்ணுக்கு தேவையான சிகிச்சை அளிக்க உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நவீன சிகிச்சை கிடைக்கும் வகையில் அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

    ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் உள்ள தனி வார்டில் அந்த பெண்ணுக்கு இன்று காலை முதல் நவீன சிகிச்சைகள் தொடங்கி உள்ளன. அவரது வயிற்றில் இருக்கும் குழந்தைககு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.

    24 மணி நேரமும் அந்த கர்ப்பிணி பெண் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். டாக்டர்கள் சுழற்சி முறையில் அந்த பெண்ணை பரிசோதித்து வருகிறார்கள்.

    கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    சாத்தூர் அரசு மருத்துவ மனையில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிப்புக்கு உள்ளான கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனை முதல் மாடியில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மகப்பேறு மருத்துவத் துறை தலைவர் டாக்டர் சாந்தி மற்றும் டாக்டர்கள் நடராஜன், ரஞ்சித் ஆகியோர் தலைமையில் மருத்துவக்குழு நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று தாக்கம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும்.

    அந்த பெண்ணுக்கு ஏற்கனவே சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் சிகிச்சை தரப்பட்டது. இருந்த போதிலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று காலை எச்.ஐ.வி. தொற்று உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்து அதன் அடிப்படையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சர்வதேச தரத்துடன கூடிய “எய்ட்ஸ் வைரஸ் லோடு” என்ற அதிநவீன சாதனம் பயன்பாட்டில் உள்ளது. அதன் வாயிலாக கர்ப்பிணி பெண்ணின் உடலில் நோய் தொற்றின் தாக்கத்தை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

    தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ள கர்ப்பிணி பெண் நலமாக உள்ளார். இருந்தபோதிலும் மஞ்சள்காமாலை நோய் தொற்றுக்கான கிருமி பாதிப்பு உள்ளது. அவற்றுக்கான சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #HIV #HIVBlood #Pregnantwoman

    Next Story
    ×