search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி
    X

    சென்னை நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். #NewYear2019
    சென்னை:

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஓட்டல்களில் பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்களை நியமிக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    2018-ம் ஆண்டு விடைபெறுகிறது. 2019 புத்தாண்டு வருகிற செவ்வாய்க்கிழமை பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னை நகரில் கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும், ஆட்டம்-பாட்டத்தோடு இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டல்களில் பாதுகாப்பான முறையில், புத்தாண்டு கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன் ஆகியோர் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு செய்யவேண்டும்? என்பது குறித்து போலீசார் அறிவுரைகளை வழங்கினார்கள்.

    அதன் விவரம் வருமாறு:-

    * புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணி வரை கொண்டாடலாம்.

    * 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான இசை நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக்கூடாது.

    * ஆனால் மது பார்கள் அந்தந்த ஓட்டல்கள் லைசென்சு பெறும்போது, என்னென்ன நேரம் ஒதுக்கப்பட்டதோ, அந்த குறிப்பிட்ட நேரம் வரை திறந்து வைத்திருக்கலாம்.

    * சில ஓட்டல்களில் 24 மணி நேரமும் மது பார்களை திறந்து வைத்திருக்க அனுமதி பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த ஓட்டல்களில் மட்டும் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 1 மணி வரையோடு மது பார்களை மூடிவிட வேண்டும்.

    * நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    * பெண் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கவனிப்பதற்காக பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.

    * புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்களிடம் அத்துமீறி நடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களை அனுமதிக்கக்கூடாது.

    * வாடிக்கையாளர்களின் கார்களை சோதிக்க வேண்டும்.

    * வாடிக்கையாளர்களின் உடைமைகளையும் சோதிக்க வேண்டும்.

    * ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    * போதையில் இருக்கும் வாடிக்கையாளர்களை வாகனம் ஓட்டிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. உரிய டிரைவர்களை ஏற்பாடு செய்து போதையில் இருப்பவர்களை கார்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

    * தேவைப்பட்டால் டிராவல்ஸ் நிறுவனங்களின் கார்களையும் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.

    * புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களை மூடிவிட வேண்டும். நீச்சல்குளத்தின் மேல் பகுதியிலோ அல்லது அருகிலோ புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான மேடை எதையும் அமைக்கக்கூடாது.

    * நீச்சல் குளங்களை மூட வசதியில்லாதபட்சத்தில், அருகில் காவலாளிகளை காவலுக்கு நிறுத்த வேண்டும்.

    * நட்சத்திர ஓட்டல்களின் வாசல்கள், வாகன நிறுத்தும் இடங்கள், இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும், கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

    மொத்தத்தில் விபத்து இல்லாமல், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற இடம் கொடுக்காமல், மகிழ்ச்சியாக புத்தாண்டு விழாவை கொண்டாட ஓட்டல் நிர்வாகத்தினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட நட்சத்திர ஓட்டல்களின் அதிகாரிகள் அறிவுரைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். #NewYear2019
    Next Story
    ×