search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ்துமஸ் திருநாள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
    X

    கிறிஸ்துமஸ் திருநாள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    இயேசு பிரான் பிறந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்து கூறி உள்ளார். #Christmas #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “கிறிஸ்துமஸ்” திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இரக்கத்தின் மறுஉருவான இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்த இயேசு பிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, ‘‘உங்கள் பகைவர்களை நேசியுங்கள்’’, ‘‘உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்”, ‘‘உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்”, ‘‘உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்”, போன்ற அருளுரைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால், உலகில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும்.

    அம்மா, இந்தியாவிலேயே முதல் முறையாக கிறிஸ்துவ மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் சிறப்பு திட்டம், கிறிஸ்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகளுக்காக அரசின் மானிய உதவி வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினார். கிறிஸ்துவ மக்களின் நலனில் அக்கறை கொண்ட அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசும், தொடர்ந்து அத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், இதுவரை 3,236 கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.



    இயேசு பிரான் பிறந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Christmas #EdappadiPalaniswami

    Next Story
    ×