search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தம் பகுதியில் அறுவடைக்கு தயாராகும் பொங்கல் கரும்புகள்
    X

    நத்தம் பகுதியில் அறுவடைக்கு தயாராகும் பொங்கல் கரும்புகள்

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பொங்கல் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஜோடி கரும்புத்தட்டை ரூ.40முதல் ரூ.50 வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நத்தம்:

    தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பழமொழி அதற்கேற்ப விவசாயிகளின் வாழ்விலும் ஒரு வழிபிறக்கும் நாளாக இன்றளவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி பொங்கல் வைக்கும்போது கரும்பு,மஞ்சள்,மாவிலை உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு எனும் கருப்பு கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஆவிச்சிபட்டி, சேர்வீடு, குட்டுர், காசம்பட்டி, வத்திபட்டி, அய்யனார்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளில் ஆங்காங்கே இந்த கரும்புகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

    இந்த கரும்பு குறித்து விவசாயி சீரங்கம்பட்டி அழகர்சாமி (55)கூறியதாவது:-

    இந்த கருப்பு கரும்புக்கு வயது 10 மாதங்களாகும். கருப்புகரும்பு வேரோடு பறிக்கப்படுவதால் இந்த கரும்பை அறுவடை செய்து விட்டு மற்ற ஆலைகரும்பு போல் மறுதாம்பு விடமுடியாது. ஒரே மகசூல் மட்டுமே கிடைக்கும். இந்த கரும்பானது அதிக இனிப்புத்தன்மை வாய்ந்தது. ஆனால் வெல்லம் காய்ச்சுவதற்கு ஏற்றது அல்ல. தவிர ஒரு ஏக்கருக்கு அனைத்து செலவுகளையும் சேர்த்து அறுவடை செய்வது உள்பட ரூ.50ஆயிரம் வரை செலவாகும். வரவு சுமார் ரூ.90ஆயிரம் முதல் ரூ.1லட்சம் வரை கிடைக்கும்.

    பொதுவாக விவசாய பணி வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது கடும் தட்டுப்பாடாக இருக்கிறது. அத்துடன் இயற்கையாக பெய்யும் மழையும், கிணறுகளில் உள்ள நீர் மட்டமும் குறையாமல் இருந்தால் தான் கரும்பு விவசாயம் லாபத்தை ஈட்டமுடியும். அதிகமான வேலைகள் இந்த கரும்பில் தான் உண்டு.

    இதற்கெல்லாம் அரசு விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கினால் இந்த கரும்பை விவசாயிகள் விரும்பி பயிரிடுவார்கள். உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால் ஒரு ஜோடி கரும்புத்தட்டை ரூ.40முதல் ரூ.50 வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் தினம் நெருங்கும் காலத்தில் இந்த கரும்புகள் அறுவடை செய்து மதுரை, திண்டுக்கல், மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×