search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பு: 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை
    X

    நெய்வேலி பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பு: 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை

    நெய்வேலி பகுதியில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் சித்ரா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சித்ரா கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

    அதேபோல் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த மணிபாலா (வயது 31) என்பவர் நடைபயிற்சி சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகை பறிக்கப்பட்டது.

    அதுபோல் நெய்வேலி டவுன்ஷிப்பில் தேவகி என்ற பெண்ணிடம் 5 பவுன் நகையும், நெய்வேலி 12-வது வட்டம் ஜானகி என்பவரிடம் 1½ பவுன் நகையும், 20-வது வட்டத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் 4 பவுன் நகையும் பறிக்கப்பட்டது. நெய்வேலி பகுதியில் மொத்தம் 10 பெண்களிடம் 50 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது.

    இது குறித்து அவர்கள் நெய்வேலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் நடத்திய விசாரணையில் பெண்களிடம் நகை பறித்தது நெய்வேலி மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த வசந்தராஜா (24) மற்றும் நெய்வேலியை சேர்ந்த செந்தில்குமார் (22) என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெய்வேலி கோர்ட்டில் நடந்து வந்தது.

    பின்னர் இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை நீதிபதி கணேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அரசு வக்கீலாக தேவசுந்தரி ஆஜரானார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வசந்தராஜா, செந்தில்குமார் ஆகியோருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கணேஷ் இன்று உத்தரவிட்டார்.
    Next Story
    ×