search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
    X

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே சனவெளி கிராமத்தைச்சேர்ந்த பூசாரி சிவசங்கர பாண்டியன். இவர் வீட்டில் இல்லாதபோது பூட்டை உடைத்து 13 பவுன் நகை, 2 ஜோடி கொலுசு, 1,000 ரூபாய் ரொக்கம் திருட்டுப்போனது.

    இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சந்தோஷ்குமார் (வயது28) என்பவரை ஆர்.எஸ். மங்கலம் போலீசார் கைது செய்தனர்.

    உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரை போலீசார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் பாதுகாப்புக்கு இருந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சந்தோஷ் குமார் தப்பியோடி தலைமறைவானார். போலீசார் தீவிரமாக அவரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறுகையில், வீடு புகுந்து திருடிய சந்தோஷ்குமார் தப்பி ஓடும்போது சனவெளி கண்மாய் அருகே அடையாளம் தெரியாத 10 பேர் பிடித்து தாக்கி உள்ளனர். இதில் அவன் பலத்த காயம் அடைந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு பாதுகாப்புக்கு 4 போலீசார் காவலில் இருந்தனர்.

    அவர்களிடம் கழிவறை செல்வதாக கூறிச் சென்ற சந்தோஷ்குமார், அங்கிருந்த ஜன்னல் வழியாக தப்பி ஓடி உள்ளான். அவனை பிடிக்க திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    காவல் பணியில் கவனக்குறைவாக இருந்த 4 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×