search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.2,400 கோடி ஊழலில் சிக்கிய அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    ரூ.2,400 கோடி ஊழலில் சிக்கிய அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    முட்டை, பருப்பு கொள்முதல் செய்ததில் ரூ.2,400 கோடி ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #mkstalin #tnministers #corruption
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கான முட்டை, பருப்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததில் 2,400 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக வருமானவரித்துறை சோதனைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. சத்துணவுத்திட்டத்தை உண்மையிலேயே சத்து உள்ள திட்டமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கருணாநிதி ஆட்சியிலிருந்த போது முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதுமட்டுமல்ல, தி.மு.க. ஆட்சி இருந்தவரை பள்ளிகளில் முட்டை வழங்கும் திட்டம் மிகச் சிறப்பாகவும் முறையாகவும் நேர்மையுடனும் செயல்படுத்தப்பட்டது.

    முட்டை வழங்கும் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டில் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்த கணக்குகள் ஆவண ஆதாரங்களாக வருமானவரித்துறையின் கையில் சிக்கியிருக்கின்றன. அதைவிட அபாயகரமானது என்னவென்றால் அரசாங்கத்தின் ரகசிய கோப்புகளும், அரசு ரகசியங்கள் அடங்கிய குறிப்புகளும் அந்த தனியார் முட்டை நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

    லஞ்ச ஊழலுக்காக வஞ்சக எண்ணத்தோடு அரசு ரகசியத்தையே விற்பனை செய்த கேவலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் நடைபெற்று தமிழகமே வெட்கித்தலை குனிந்து நிற்கிறது. இந்த ரகசியங்கள் அனைத்தும் அரசின் மூத்த அதிகாரிகளின் ஆதரவு மற்றும் துணையின்றி முட்டை நிறுவனத்திற்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மூத்த அதிகாரிகளோடு கைகோர்த்து அமைச்சர்களும் இதற்கு உடந்தையாக இருந்திருப்பார்கள் என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

    அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும், அவர்களுக்கு வேண்டிய நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்ட ரெய்டுகளில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் வருமானவரித்துறையின் நம்பகத்தன்மை மீது மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் உருவாகும் சூழலை மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கி விட்டது. ஊழல் ஒழிப்பில் பா.ஜ.க. அரசின் இரட்டை வேடம் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் சோதனைகளில் வெளியாகி நடுநிலையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது.

    ஆகவே, பள்ளிக்குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த ஊழலையும் மூடி மறைக்கவோ அல்லது அ.தி.மு.க. அமைச்சர்களை எப்படியாவது தப்பிக்க வைக்கவோ மத்திய பா.ஜ.க. அரசு எவ்வித முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

    2,400 கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    அப்பாவிகள் மீது எதற்கு எடுத்தாலும் தேசத்துரோக வழக்குப் போடும் அ.தி.மு.க. அரசு, தனியார் முட்டை நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்று கொடுங்குற்றம் புரிந்திருக்கும் அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த அமைச்சர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    குட்கா ஊழலை விசாரித்து வந்த இரு அதிகாரிகளை மாற்றம் செய்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. மீது குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யாமல் விசாரணை நடத்தும் அதிகாரிகளை தொடர்ந்து மாற்றம் செய்வது உண்மை குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி. மாறுதல்களை உடனே ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mkstalin #tnministers #corruption
    Next Story
    ×