search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
    X

    சேலம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களால் உயிருடன் மீட்கப்பட்டது.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்மணி. விவசாயியான இவரது கணவர் கிருஷ்ணன் இறந்துவிட்ட நிலையில் 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதன் மூலம் பால் வியாபாரமும் செய்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 4 மாத கர்ப்பிணியான சினை பசுமாடு ஒன்றை அவரது விவசாய கிணற்றின் ஓரமாக உள்ள வயல் வரப்பில் மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார். அங்கே புற்களை மேய்ந்த மாடு கிணற்றின் திட்டுகளில் செழிப்பாக உள்ள புற்களை மேய்வதற்காக கிணற்று திட்டிற்கு சென்றுள்ளது.

    அப்போது நிலை தடுமாறிய சினை பசுமாடு தவறி கிணற்றில் விழுந்தது. சுமார் 60 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்தநிலையில் தண்ணீரில் விழுந்த பசுமாடு மேலே ஏறமுடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளது. இதையறிந்த பெண் விவசாயி அம்மணி அக்கம் பக்கத்தினரை அழைத்து பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பசு மாட்டை மீட்க முடியாத நிலையில் சினைமாடு தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி வந்தது. இதையடுத்து உடனடியாக ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் அதிரடியாக கிணற்றில் குதித்தனர். பின்னர் பசுமாட்டை மீட்க கிணற்றில் போடப்பட்ட கயிறுகளை கொண்டு பசுமாட்டை பாதுகாப்பாக கட்டினர்.

    இதையடுத்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கையிற்றை மேலே இழுத்து பசுமாட்டை உயிருடன் மீட்டனர். மேலே வந்த மாட்டிற்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டது. சிறுதுநேரம் படுத்தே இருந்த பசுமாடு எழுந்து நடக்க தொடங்கியது. சினை மாடு உயிருடன் மீட்கப்பட்டதை தொடர்ந்து பெண் விவசாயி அம்மணியும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்களும் தெரிவித்தனர். தொடர்ந்து லேசான காயமடைந்த பசுமாட்டிற்கு கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    Next Story
    ×