search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலால் கடும் சேதம் - பேரிடர் பாதிப்பாக அறிவிக்க ம.தி.மு.க. வலியுறுத்தல்
    X

    கஜா புயலால் கடும் சேதம் - பேரிடர் பாதிப்பாக அறிவிக்க ம.தி.மு.க. வலியுறுத்தல்

    தமிழகத்தைப் பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து தமிழக அரசு கோரும் புயல் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #Vaiko
    திருச்சி:

    ம.தி.மு.க. உயர் நிலைக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் இரவு பகலாக கண் துஞ்சாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசுத்துறை பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்கு ம.தி.மு.க. பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

    புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும்.

    தென்னை விவசாயிகளின் 20 ஆண்டு கால உழைப்பு பலன் இன்றி ஒரே நாளில் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டு கண்ணீரில் மிதக்கிறார்கள். புயலால் முறிந்து விழுந்த தென்னை மரம் ஒன்றுக்கு இழப்பீடு ரூ. 600 என்றும், அதனை வெட்டி அகற்ற ரூ. 500 என்றும் ஆக மொத்தம் ரூ. 1,100 இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருப்பது எந்த வகையிலும் ஈடாகாது.

    சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியபோது தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதே இழப்பீடுத் தொகையை ‘கஜா’ புயலில் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.



    நெல் ஒரு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமும், வாழை ஒரு ஏக்கருக்கு ரூ.3 லட்சமும், வழங்க வேண்டும். மக்காச்சோளம், பருத்தி, பயிறு வகைகள் மற்றும் வெற்றிலை, முருங்கை உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்க வேண்டும்.

    மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களுக்கு ரூ. 30 ஆயிரமும், அவற்றை வெட்டி அகற்றுவதற்கு ஆகும் முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.

    மின் கட்டணம், நில வரி உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும்.

    குடிசை வீடுகளை இழந்தோருக்கும், கடலோர மீனவர் குடியிருப்புக்களைப் புனரமைக்கவும், கல் வீடுகளில் சேதம் அடைந்தவற்றைப் புதுப்பிக்கவும் அரசு சார்பில் கணக்கீடு செய்து முழுச் செலவையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.

    மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகள், வலைகள், மீன்பிடிக் கருவிகள் உள்ளிட்டவற்றைச் சீர்படுத்திட தமிழக அரசே முழுமையாக உதவி அளிக்க வேண்டும்.

    இயற்கைச் சீற்றத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் தமிழகத்தைப் பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து தமிழக அரசு கணக்கீடு செய்து கோரும் புயல் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

    மழை, வெள்ளம் மற்றும் புயல் உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும் நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பேரிடர் காலங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இருப்பது இன்றியமையாதது ஆகும். எனவே, தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்வர வேண்டும்.

    பஸ் எரிப்பு வழக்கில் 3 அ.தி.மு.க.வினரை விடுதலை செய்தது போல ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய, மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, வருகிற 24-ந்தேதி காலை 10 மணி அளவில், வடசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது. #GajaCyclone #Vaiko

    Next Story
    ×