search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரண விசாரணை - சசிகலா பரோலில் வருவாரா?
    X

    ஜெயலலிதா மரண விசாரணை - சசிகலா பரோலில் வருவாரா?

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விரைவில் சசிகலாவிடம் விசாரணை நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Sasikala #Jayalalithaa

    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் தொடங்கி ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள், சசிகலா உறவினர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 118 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சசிகலா சார்பில் ஏற்கனவே வக்கீல் மூலம் வாக்கு மூலம் தாக்கம் செய்யப்பட்டது. மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்களிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.

    அடுத்த கட்டமாக சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருப்பதால் அவருக்கு முதலில் சிறை அதிகாரிகள் மூலம் சம்மன் அனுப்பப்படும்.

    முதலில் சகிகலாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு சிறையில் போதுமான வசதிகள் இல்லை என்பதால் நீதிபதி ஜெயிலுக்கு போய் சசிகலாவை ஜெயில் அதிகாரிகள் அறைக்கு வரவழைத்து விசாரணை நடத்தலாமா? அல்லது சசிகலாவுக்கு பரோல் அளித்து சென்னைக்கு வரவழைத்து கமி‌ஷன் முன் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தலாமா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


    இதில் நீதிபதி ஜெயிலுக்கு போய் விசாரணை நடத்துவதற்கும் சாத்தியம் இல்லை என்றும், பரோலில் வரவழைத்து விசாரணை நடத்துவதுதான் முறையாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

    அடுத்து அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர், துணைத் தலைவர், லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட சில அமைச்சர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விசாரணையை வருகிற டிசம்பர் 10-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. எனவே விரைவில் சசிகலாவிடம் விசாரணை நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்ததும் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 24-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. #Sasikala #Jayalalithaa

    Next Story
    ×