என் மலர்
செய்திகள்

வில்லியனூர் அருகே ஏரியில் மீன்பிடித்த தகராறில் மாணவர் மீது தாக்குதல்
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கீழூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி சுமதி. இவர்களது மகன் சசிக்குமார் (வயது 15). இவர் அரியூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று இவர் தனது நண்பர்களுடன் அங்குள்ள ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண் டிருந்தார்.
அப்போது அருகில் குட்டை அமைத்து மீன் வளர்த்து வரும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (31), சீனுவாசன் (26), பிரகாஷ் (19), வெங்கடேசன் (25) ஆகியோர் தங்களது குட்டையில் மீன் பிடித்ததாக கூறி சசிக்குமாரை சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் சசிக்குமார் பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சசிக்குமாரின் தாய் சுமதி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து தமிழரசன் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்.






