search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான சதீஷ்
    X
    கைதான சதீஷ்

    மாணவியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்தது உண்மைதான்- கைதான வாலிபர் ஒப்புதல் வாக்குமூலம்

    அரூர் அருகே பிளஸ்-2 மாணவியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்தது உண்மைதான் என கைதான வாலிபர் சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். #dharmapurigirlstudent #girlmolested
    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சதீஷ் (வயது 22) நேற்று முன்தினம் ஏற்காட்டில் கைது செய்யப்பட்டார். அரூர் கொண்டுவரப்பட்ட அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை தருமபுரி மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கைதான வாலிபர் சதீஷ் மாணவியை கற்பழித்தது உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் அவர் கூறிய தகவல்கள் வருமாறு:-

    எனக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி அவரை சந்தித்து பேசுவேன். தீபாவளி சமயத்தில் ஊருக்கு வந்தபோது அவரை சந்தித்து தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டேன். அந்த சமயத்தில் அங்கு வந்த ரமேசும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ரமேஷ் (22) என்ற வாலிபர் சேலம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். 19-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். அவரை காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சதீசையும் காவலில் எடுத்து விசாரிக்கலாமா? என்று போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    பாலியல் பலாத்காரத்தில் உயிரிழந்த மாணவியின் உடல் நேற்று மாலை 5 மணிக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வேலூர் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் தண்டர்சீப், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் மதன்ராஜ், அமீர்தாசுல்தான் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். 3 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அரசு ஆம்புலன்ஸ் மூலம் சிட்லிங் மலை கிராமத்திற்கு மாணவி உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு இரவு 11.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவியின் வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் லட்சுமி.

    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் முதலில் கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். தற்போது போக்சோ சட்டப்பிரிவோடு, பாலியல் பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் தருமபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. வழக்கு மாற்றம் குறித்த சட்ட மாறுதல் அறிக்கையும் இந்த வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரியான அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தாக்கல் செய்து உள்ளார். குற்ற பத்திரிகையில் வழக்கு மாற்றம் தொடர்பான விவரங்கள் இடம்பெறும். இந்த வழக்கில் விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை ஏற்கனவே மாணவி இறப்பதற்கு முன்பு 6-ந் தேதி ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில் மீண்டும் இந்த வழக்கில் புகார் மனு கொடுத்து உள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    எனது மகள் மலம் கழிக்க சென்றபோது சதீஷ், ரமேஷ் ஆகியோர் தன்னை கெடுத்ததாக கூறினார். இந்த விவரங்களை கடந்த 6-ந் தேதி பெண் உதவி ஆய்வாளர் விசாரித்தபோது பெண்ணின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு இதை சொல்லவில்லை என்றும் அவர் என்னிடம் கூறினார். இன்று எனது மகள் இறந்துவிட்ட நிலையில் என் மகளின் சாவுக்கு சதீஷ் மற்றும் ரமேஷ் இருவரும் தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மாணவியின் தந்தை அண்ணாமலை புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி சட்ட மாறுதல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளார்.

    தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விரைவில் சிட்லிங் கிராமத்திற்கு வர உள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் மாணவியின் குடும்பத்துக்கு விரைவில் நிதி உதவியும் வழங்கப்பட உள்ளது.

    ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன்

    மாணவியின் புகாரை பதிவு செய்யாமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துக் கிருஷ்ணன் மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா? என்பது குறித்து அரூர் ஆர்.டி.ஓ. புண்ணியக்கோடி விசாரணை நடத்தி வருகிறார். நேற்று அவர் மலை கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார். விரைவில் அவர் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் கோட்டப்பட்டி போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளார். விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பிறகு போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் முடிவு செய்வார்கள்.  #dharmapurigirlstudent #girlmolested
    Next Story
    ×