search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பண்டிகை- சென்னையில் இருந்து 2 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்
    X

    தீபாவளி பண்டிகை- சென்னையில் இருந்து 2 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து 2 லட்சம் பேர் பயணம் செய்தனர். #diwalifestival #train #governmentbus
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக 20 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முதல் சென்னையில் 6 இடங்களில் இருந்து இந்த பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றன.

    போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று 1405 சிறப்பு பஸ்கள் உள்பட மொத்தம் 2931 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பஸ்கள் திருவண்ணாமலை செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் அங்கு பயணிகள் கூட்டம் நேற்று மாலையில் இருந்து அதிகரித்தது.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டதால் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதியது. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு முழுவதும் மட்டுமின்றி விடிய விடிய மக்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் அரசு பஸ்களில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 907 பேர் பயணம் செய்தனர். இது தவிர ஆம்னி பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கையை சேர்த்தால் சுமார் 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது.

    இன்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து 3575 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்றைவிட கூடுலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய ஏதுவாக 6 பஸ் நிலை யங்களுக்கும் இணைப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மாநகர பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இயக்கப்படுகிறது.

    ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றன. அதிக கட்டணம் வசூலித்தாலும் அதனை பொருட்படுத்தாமல் சிலர் பயணம் செய்தனர். ஏழை மக்கள் அரசு பஸ்களை மட்டுமே நம்பி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அரசு பஸ்களில் இருக்கை வசதி சரியாக இல்லாததோடு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டையும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    பஸ் பயணத்தை விட ரெயில் பயணமே பாதுகாப்பாக இருப்பதாக கருதி பெரும்பாலான மக்கள் அதனை விரும்பி தேர்வு செய்கின்றனர். அதிலும் பஸ்சை விட ரெயில்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் நெரிசலில் சிக்கி பயணம் செய்தாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

    நீண்ட தூரம் செல்லக் கூடிய ரெயில்களில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மக்கள் தொங்கி கொண்டே பயணம் செய்தனர். படிக்கட்டில் கூட நிற்க முடியாத அளவிற்கு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் முழுவதும் மக்கள் நிறைந்து காணப்பட்டனர். இன்று பகலில் செல்லும் ரெயில்களும் நிரம்பி வழிந்தன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சேலம், கோவை, திருவனந்தபுரம் செல்லக் கூடிய ரெயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. #diwalifestival #train #governmentbus
    Next Story
    ×