search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்
    X

    9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதால் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain
    சென்னை:

    தெற்கு மேற்கு பருவமழை இம்மாதம் 21-ந் தேதி முற்றிலும் வாபஸ் ஆனதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வங்க கடலில் உருவான புயல்கள் ஈரப்பதத்தை உறிஞ்சியதால் காற்றின் போக்கு மாறியது. இதனால் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த 26-ந் தேதி முதல் பருவ காற்று வீச தொடங்கிய நிலையில் மழை பெய்யத் தொடங்கவில்லை.

    இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் இருந்து வடக்கு வங்க கடல் வரை குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது.

    இதேபோல் இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    மேலும் மேற்கு மத்திய மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதியிலும், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதையடுத்து நாளை காலை முதல் 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான தூறலுடன் மழை தொடங்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.


    கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவிய சென்னையில் நேற்று காலை பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை தூறியது. மாலை, இரவிலும் விடிய விடிய மழை தூறியது.

    இதனால் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு இதமான குளிர் நிலவுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அடுத்த 2 நாட்களுக்கு படிப்படியாக மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 9 தமிழக மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் அதிகபட்சமாக 11 செ.மீ. வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  #IMD #TNRain
    Next Story
    ×