search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு, பன்றி காய்ச்சல் உயிரிழப்பு 24 ஆக உயர்வு - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X

    டெங்கு, பன்றி காய்ச்சல் உயிரிழப்பு 24 ஆக உயர்வு - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    டெங்கு, பன்றி காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary
    சென்னை:

    டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    சென்னை சைதாப்பேட்டை தாடண்டன் நகர் அரசு குடியிருப்பில் இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் டெங்கு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர்.

    அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களிடத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கினார்கள். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் தலைமையில் இந்தவிழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    பின்னர் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பன்றி காய்ச்சலை பொறுத்தவரையில் கைகழுவும் பழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தாலே இந்நோயை தவிர்க்கலாம். நல்ல தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு உண்டாகிறது. நீரில் கொசுக்கள் உருவாகும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது.

    பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சலால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் தான் இவை அதிகமாக பரவுகிறது. அதனால் கை கழுவும் பழக்கத்தை பொதுமக்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் மனிதர்களை கடிக்கும் கருப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கொசுக்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள முழு கை உடைகளை அணிய வேண்டும்.

    கர்ப்பிணிகள், முதியவர்கள், சர்க்கரை நோய் மற்றும் எடை அதிகம் உள்ளவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பன்றி, டெங்கு காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம். கவனக்குறைவாகவும் இருக்க வேண்டாம்.



    பன்றி காய்ச்சலுக்கு இதுவரையில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் 2 பேரும், கோவை, ஈரோட்டில் இருவரும் அறிகுறியுடன் இறந்துள்ளனர். தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்தால் இறப்பை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.

    டெங்கு காய்ச்சலுக்கு இந்த வருடம் இதுவரையில் 9 பேர் உயிர் இழந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengue #SwineFlu #TNHealthSecretary

    Next Story
    ×