என் மலர்
செய்திகள்

நிலக்கோட்டை அருகே பன்றிகளால் காய்ச்சல் பரவும் அபாயம்
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே பன்றிகளால் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. வீடுகளில் சுகாதாரமற்ற முறையில் பன்றி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் விதிகளை மீறி பன்றி வளர்த்து வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பறையப்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இப்பகுதியில் சிலர் வீடுகளில் அடைத்து அதிக அளவு பன்றிகளை வளர்த்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே மர்ம காய்ச்சல் பரவுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.