search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட காட்சி.
    X
    முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். #SrirangamTemple #Edappadipalaniswami
    திருச்சி:

    கரூர், திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் அ.தி. மு.க. நிர்வாகிகளின் இல்ல திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார்.

    கரூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு திருச்சி வந்த அவருக்கு மாவட்ட எல்லையான பெட்டவாய்த் தலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு பயணியர் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    முன்னதாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக முதல்வர் பழனிசாமி கோவிலுக்குள் வந்தார். அங்குள்ள பிரகாரத்தில் கோவில் யானை ஆண்டாள் அவரை ஆசீர்வாதம் செய்தது. யானைக்கு அவர் பழங்கள் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து ஆரியப்பட்டாள் வாசல் வழியாக முதல்வர் பழனிசாமி சென்று மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்தார். பின்னர் தாயார் சன்னதியில் உள்ள ரெங்கநாச்சியாரை தரிசனம் செய்துவிட்டு உபகோவிலான மேட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு பயபக்தியுடன் அவர் சாமி கும்பிட்டார்.

    இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த பேட்டரி காரில் ஏறி பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு சென்றார். தொடர்ந்து ராமானுஜர் சன்னதிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் ரெங்கநாதர் கோவில் புத்தகம் மற்றும் மூலவர் படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

    முதல்வர் வருகையையொட்டி உதவி கமி‌ஷனர் ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்பிரமணியன், உமாசங்கர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் இருந்தனர்.

    அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், சரோஜா, வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் ப.குமார், ரத்தினவேல், கலெக்டர் ராசா மணி, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் முதல்வருடன் சென்றனர்.

    முன்னதாக கோவிலுக்கு வந்த முதல்வருக்கு கட்சி நிர்வாகிகள் அணிவிக்க வைத்திருந்த சால்வைகள் மற்றும் பரிசு பொருட்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரகாரத்தை அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி சுற்றி வந்தபோது எடுத்தபடம்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவிலினுள் தரிசனம் செய்த நேரத்தில் பாதுகாப்பு கருதி பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரெங்கநாதரை தரிசனம் செய்து முடித்த பின்னர் அவர் கோவிலை சுற்றி வலம் வருவதற்காக இரண்டு பேட்டரி கார்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர் ரெங்கநாதரை தரிசனம் செய்த பிறகு ரெங்கநாச்சியார் என்று அழைக்கப்படும் தாயார் சன்னதிக்கு மேள, தாளம் முழங்க நடந்தே வந்து சாமி தரிசனம் செய்தார். #SrirangamTemple #Edappadipalaniswami
    Next Story
    ×