search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்த வழக்குகளையும் சந்திக்க தயார் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    எந்த வழக்குகளையும் சந்திக்க தயார் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

    மடியில் கனம் இல்லாததால் எந்த வழக்குகளையும் சந்திக்க தயார் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். #ADMK #EdappadiPalanisamy
    உளுந்தூர்பேட்டை:

    அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் எம்.ஜி.ஆர். திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அ.தி.மு.க. கொடியை ஏற்றியும், விழாவை தொடங்கி வைத்தும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து வெளியேறி, அண்ணா கனவை நனவாக்க 1972-ம் ஆண்டு இதே நாளில் அ.தி.மு.க.வை உருவாக்கினார். அன்று முதல் இன்று வரை தமிழகம் அ.தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் கட்சி பிளவுபட்டபோது அதை ஒன்றுபடுத்திய பெருமை ஜெயலலிதாவை சேரும். கழகம் பிளவுபட்டபோது சேவல் சின்னத்தில் இருந்து வெற்றி பெற்ற 27 சட்டமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். அதில் இருந்து 44 ஆண்டுகாலமாக இந்த இயக்கத்திற்காக உழைத்து கொண்டு இருக்கிறேன்.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஒரு வருடம் 8 மாதம் ஆகி இருக்கிறது. அவர் விட்டுச்சென்ற பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தை அதிகமாக ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.க. தான். கிட்டத்தட்ட 28 ஆண்டு காலம் ஆட்சி செய்து இருக்கிறது.

    இந்த கட்சியை மிரட்டி பார்க்கின்றனர். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை. உங்களுக்கு தான் பயம் உள்ளது. புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டிய விவகாரத்தில் ஊழல் நடந்தது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டபோது நீங்கள் நீதிமன்றம் சென்றீர்கள். ஆனால் என் மீது நீங்கள் புகார் கொடுத்தீர்கள். நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை.

    நெடுஞ்சாலை ஒப்பந்த வழக்கில் நீதிமன்றம், அவர் அதிகாரத்தில் இருக்கிறார், எனவே விசாரணை சரியாக நடக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளி என்று கூறவில்லை. மடியில் கனமில்லாததால் எந்த வழக்குகளையும் சந்திக்க தயார்.

    எங்கள் இயக்கத்தில் அதிக வக்கீல்கள் உள்ளனர். வழக்குதொடர எங்களுக்கும் தெரியும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் நீங்கள் சீண்டி விட்டீர்கள். அதற்கான பலனை அனுபவிக்க தான் போகிறீர்கள்.

    புதிய தலைமை செயலகத்திற்கு ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் உடனே ஏன் தடையாணை வாங்குகிறீர்கள். ஆகவே உங்களுக்கு பயம் இருக்கிறது. எத்தனை வழக்குகளையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக மக்களுக்காக நாங்கள் தான் எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளோம்.

    தி.மு.க.வில் கருணாநிதி, அவருக்கு பின்னர் மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி வந்துள்ளார். இது வாரிசு அரசியல். எனவே தி.மு.க. ஒரு கட்சி அல்ல, கம்பெனியாக்கிவிட்டார்கள். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. அண்ணா இருந்த போது, சாதாரண தொண்டன் கூட எம்.பி., எம்.எல்.ஏ. ஆனார்கள்.

    அதேபோன்று தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தொண்டனுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தனர். இதுபோன்ற எண்ணம் உடைய இயக்கம் அ.தி.மு.க. தான்.

    எங்களை பொறுத்தவரை நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை. ஆக நாங்கள் எதுவும் பேசலாம். கொள்கையுடன் இருக்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. தான். தமிழக மக்களுக்கு எந்த கட்சி நன்மை செய்கிறதோ அவர்களுடன் தான் கூட்டணி வைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×