என் மலர்
செய்திகள்

பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் போலி ஆவணம் கொடுத்து வேலையில் சேர முயற்சி - வாலிபர் கைது
ஆலந்தூர்:
பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்துக்கு, ஒரு வாலிபர் நேற்று வந்தார்.
உயர் அதிகாரியை சந்தித்த அவர், தனக்கு அங்கு தோட்ட பணியாளர் வேலை கிடைத்து இருப்பதாகவும் அதற்கான உத்தரவு வந்திருப்பதாகவும் கூறினார். அதற்கான நியமன ஆணை ஆவணத்தையும் கொடுத்தார்.
அதிகாரி அதை ஆய்வு செய்தார். அப்போது, அது போலி ஆவணம் என்பது தெரிய வந்தது. இது குறித்து ராணுவ பயிற்சி மைய உயர் அதிகாரி ராஜேந்திரசிங் பரங்கிமலை போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து பரங்கிமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன் விசாரணை நடத்தினார். அப்போது, போலி ஆவணம் கொடுத்து வேலைக்கு சேர முயன்ற வாலிபர் பெயர் அருண்குமார் (23). அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஏஜெண்டு ஒருவர் ஒரு லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு அருண்குமாருக்கு இந்த போலி உத்தரவை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைதான வாலிபர் அருண்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். போலி உத்தரவை கொடுத்த ஏஜெண்டு யார் என்பது குறித்து விசாரணை நடை பெறுகிறது.
இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படலாம் என்று கூறப்படுகிறது. பணம் வாங்கிக் கொண்டு போலி ஆவணம் கொடுத்த ஏஜெண்டு விரைவில் பிடி படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.