என் மலர்
செய்திகள்

திருமங்கலத்தில் மூதாட்டியிடம் 8 பவுன் நகை அபேஸ் - 2 பேருக்கு வலைவீச்சு
பேரையூர்:
திருமங்கலம் அய்யப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கோசலை (வயது65). இவர்களது மகள் சக்கரையம்மாள் திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் நிர்வாக அலுவலராக உள்ளார்.
நேற்று கடைக்கு சென்று விட்டு கோசலை வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்கள் வந்தனர்.
அவர்கள் கோசலையிடம் இங்கு திருடர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. நகைகளை கழுத்தில் அணிந்து செல்லாதீர்கள் என போலீஸ் போல் கூறி உள்ளனர். மேலும் நகைகளை கழற்றி தாருங்கள் பேப்பரில் சுற்றித் தருகிறோம் என்றும் தெரிவித்தனர்.
இதனை நம்பிய கோசலை தான் அணிந்திருந்த 5 மற்றும் 3 பவுன் தங்க சங்கிலிகளை கழற்றி கொடுத்துள்ளார். அதனை பேப்பரில் வைத்து சுற்றி கொடுத்து விட்டு 2 இளைஞர்களும் சென்று விட்டனர்.
வீட்டிற்கு வந்த கோசலை பேப்பரை பிரித்து பார்த்த போது நகைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






