search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷேர் ஆட்டோ கட்டண உயர்வால் மாநகர பஸ்சுக்கு திரும்பும் பயணிகள்
    X

    ஷேர் ஆட்டோ கட்டண உயர்வால் மாநகர பஸ்சுக்கு திரும்பும் பயணிகள்

    கட்டண உயர்வால் பயணிகள் ஷேர் ஆட்டோக்களை தவிர்த்து மீண்டும் மாநகர பஸ்களுக்கு திரும்பி உள்ளனர். #TNTransport #Bus #FuelPriceHike

    சென்னை:

    மாநகர போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாலும், ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதனால் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லாமல் சில வாரம் ஓடியது.

    பஸ் பயணிகள் இரு சக்கர வாகனங்களில் அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கு சென்றனர். பலர் ஷேர் ஆட்டோக்களுக்கும், மின்சார ரெயிலுக்கும் மாறினார்கள்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3,200 மாநகர பஸ்கள் 800 வழித்தடங்களில் இயக்கப்பட்டன. நாள் தோறும் 35 லட்சம் பேர் பயணம் செய்தனர். கட்டண உயர்வுக்கு பின் பயணிகள் எண்ணிக்கை 20 முதல் 25 லட்சமாக குறைந்தது. சுமார் 10 லட்சம் பயணிகள் மாநகர பஸ்களை தவிர்த்து மின்சார ரெயில் மற்றும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்த தொடங்கினர்.

    அதன்பிறகு போக்குவரத்து கழக அதிகாரிகள் பயணிகளை கவர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர். டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பஸ்களை சாதாரண கட்டண பஸ்களாக மாற்றி அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தனர். இது தொடர்பாக டீலக்ஸ் பஸ்களில் சாதாரண கட்டணம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. மேலும் குறைந்த கட்டணம் ரூ.5 என்றும் மாற்றப்பட்டது. இதன் பயனாக கடந்த 4 வாரத்தில் 80 ஆயிரம் பயணிகள் வரை மீண்டும் மாநகர பஸ்களை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்தார்.

     


    அவர் மேலும் கூறுகையில், மாநகர பஸ்களில் சாதாரண கட்டணம் என ஒட்டப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணம் ரூ.5 என்றும் அனைத்து பஸ்களிலும் ஒட்டப்படுகிறது. எனவே மாநகர பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் பழைய இலக்கை அடையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே ஷேர் ஆட்டோக்களில் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி ரூ.5, ரூ.10, ரூ.15 என கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் ஷேர் ஆட்டோக்களை தவிர்த்து மீண்டும் மாநகர பஸ்களுக்கு திரும்பி உள்ளனர்.

    மேலும் பெட்ரோல் விலை உயர்வால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வந்தவர்களும் மாநகர பஸ்களில் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக மாநகர பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் 10 ஆயிரம் பேர் வரை அதிகரித்துள்ளது.

    இதுபற்றி ஷேர் ஆட்டோவை பயன்படுத்தி வந்த பயணி ஒருவர் கூறும்போது, ‘‘முன்பு மாநகர பஸ் கட்டணமும், ஷேர் ஆட்டோ கட்டணமும் இணையாக இருந்தது. தற்போது பஸ் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. எனவே மாநகர பஸ்சுக்கு திரும்பி விட்டேன். மாநகர பஸ்களில் டிக்கெட் கொடுக்கிறார்கள். இதனால் கேள்வி கேட்க முடியும், ஷேர் ஆட்டோக்களில் அவர்கள் கேட்பதை கொடுத்துதான் ஆக வேண்டும் என்றார்.

    மாநகர பஸ்கள் சில வழித்தடங்களில் தாமதமாக வருவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. குறிப்பாக வில்லிவாக்கம்-பிராட்வே வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் தாங்கள் 30 முதல் 45 நிமிடம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

    சில சமயம் மாநகர பஸ்கள் ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து சேர்ந்தாற்போல் மொத்தமாக வருவதாகவும் பயணிகள் புகார் கூறினர். இதுபற்றி சம்பந்தப்பட்ட டெப்போ அதிகாரிகளிடம் கேட்டபோது, போக்குவரத்து நெரிசலால் இதுபோன்ற தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். #TNTransport #Bus #FuelPriceHike

    Next Story
    ×