search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக அமைச்சர் தங்கமணி அவசரமாக டெல்லி பயணம்
    X

    கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக அமைச்சர் தங்கமணி அவசரமாக டெல்லி பயணம்

    தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக அமைச்சர் தங்கமணி நேற்று டெல்லி புறப்பட்டார். இன்று மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை வைக்கிறார். #MinisterThangamani
    சென்னை:

    தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும், போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டார். அவருடன் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் விக்ரம் கபூரும் டெல்லி சென்றார்.

    அமைச்சர் தங்கமணி, இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயல் மற்றும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ராஜாங்க மந்திரி(தனி பொறுப்பு) ஆர்.கே.சிங் ஆகியோரை சந்திக்க இருக்கிறார். தனது டெல்லி பயணம் குறித்து அமைச்சர் தங்கமணி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது மின் பற்றாக்குறை மற்றும் நிலக்கரி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதே போன்று வடசென்னை அனல் மின்நிலையத்தில் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் மின் தேவை குறைந்து உள்ளது. இதனால் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் விக்ரம் கபூருடன் டெல்லி செல்கிறேன்.

    இன்று மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்திக்கிறேன். அவரிடம் கூடுதலான வேகன்களில் நிலக்கரி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருக்கிறேன். அதாவது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிறகு 10 வேகன்களில் வந்த நிலக்கரியானது தற்போது 13 வேகன்களில் வந்து கொண்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கையையும் அதிகரித்து 20 வேகன்கள் வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளேன். நிலக்கரி கையிருப்பு தற்போது நிறைய மாநிலங்களிலும் குறைவாகத்தான் இருக்கிறது.

    மேலும் மத்திய மின் தொகுப்பில் இருந்து 6 ஆயிரத்து 152 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு தர வேண்டும். ஆனால், தற்போது 3 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் தான் தரப்படுகிறது. எனவே, எஞ்சிய 2 ஆயிரத்து 852 மெகாவாட் மின்சாரத்தையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்க இருக்கிறேன். இது தொடர்பாக மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை ராஜாங்க மந்திரி(தனி பொறுப்பு) ஆர்.கே.சிங்கையும் சந்தித்து பேச இருக்கிறேன்.

    தனியாரிடம் இருந்து 2 ஆயிரத்து 830 மெகாவாட் மின்சாரம் பெற வேண்டும். ஆனால், தற்போது 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் பெறப்படுகிறது. எனவே அதனையும் முழுமையாக பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். எந்த விதத்திலும் தமிழகத்தில் மின்பாதிப்பு இல்லை, மின் வெட்டு இல்லை.

    அரசியலுக்காக தவறான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தமிழகம் மின் மிகை மாநிலம் என்ற பெயரை அ.தி.மு.க. அரசு எப்போதும் நிலைநாட்டும். தற்போது 15 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு வைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அந்த வகையில் நிலக்கரி அனுப்ப வேண்டும் என்பதற்காக மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterThangamani

    Next Story
    ×