search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழலில் போலீஸ்-அரசு அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்- மாதவராவ் ஒப்புதல் வாக்குமூலம்
    X

    குட்கா ஊழலில் போலீஸ்-அரசு அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்- மாதவராவ் ஒப்புதல் வாக்குமூலம்

    குட்கா ஊழலில் போலீஸ் உயர் அதிகரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது உண்மை என்று மாதவராவ் வாக்குமூலம் அளித்துள்ளார். #Gutkha #ministervijayabaskar

    சென்னை:

    சென்னை செங்குன்றம் அருகே குட்கா ஆலை மற்றும் குடோன் நடத்தி வந்தவர் மாதவராவ். இதன் பங்குதாரர்களாக உமாசங்கர் குப்தா சீனிவாசராவ் ஆகியோர் இருந்தனர்.

    இவர்கள் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தயாரித்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்து பல கோடி ரூபாய் குவித்தனர்.

    சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போதைய சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.


    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து மாதவராவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதேபோல் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பிறகு சூடு பிடித்தது. கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள் உள்ளிட்ட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    பின்னர் மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு மற்றும் கலால்துறை அதிகாரிகள் என 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இவர்களில் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோருக்கு இன்று வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

    குட்கா ஆலை மற்றும் குடோன் சட்டவிரோதமாக செயல்பட்ட காலகட்டத்தில் செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத்குமாரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

    அப்போது மாதவராவிடம் இருந்து லஞ்சம் பெற்று இடைத்தரகர்கள் 2 பேர் வாயிலாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கொடுத்ததாக சம்பத்குமார் கூறி உள்ளார். மேலும் புழல் உதவி கமி‌ஷனராக இருந்த மன்னர்மன்னன் இதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் அவர் கூறியதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சி.பி.ஐ. அதிகாரிகளிடம் மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    போலீஸ் உயர் அதிகரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது உண்மை. இது சத்தியம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    அடுத்தகட்டமாக டி.எஸ்.பி. மன்னர் மன்னனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். #Gutkha #ministervijayabaskar

    Next Story
    ×