search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் - மாதவராவ் உள்பட ஐந்து பேருக்கு 4 நாட்கள் சிபிஐ காவல்
    X

    குட்கா ஊழல் - மாதவராவ் உள்பட ஐந்து பேருக்கு 4 நாட்கள் சிபிஐ காவல்

    குட்கா ஊழல் விவகாரத்தில் கைதான மாதவராவ் உள்பட 5 பேரை விசாரிக்க சிபிஐக்கு 4 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர் விஜய பாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

    இந்த விவகாரம் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை ஐகோர்ட்டு உத்தரவால் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக குட்கா ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்களை சி.பி.ஐ. திரட்டியது.

    இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினார்கள். குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜய பாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், புழல் உதவி கமி‌ஷனராக பணிபுரிந்த மன்னர்மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பத் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது.


    இதன் தொடர்ச்சியாக குட்கா வியாபாரி மாதவராவ் பங்குதாரர்கள் குமார் சங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    குட்கா ஊழல் தொடர்பாக மாதவராவ் உள்ளிட்ட 5 பேரிடமும் மேலும் பல தகவல்களை திரட்ட வேண்டி இருப்பதால் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அப்போது சி.பி.ஐ. தரப்பில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு 4 நாட்கள் சி.பி.ஐ. காவலுக்கு அனுமதி அளித்தது.

    வெள்ளிக்கிழமை கைதானவர்களை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாதவராவ் அவரது பங்குதாரர்களான உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். 5 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    செங்குன்றம் குட்கா குடோன் கடந்த 2014-ம் ஆண்டே சென்னை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 2016-ம் ஆண்டுதான் வருமான வரித்துறையினர் குட்கா முறைகேட்டை வெளியில் கொண்டு வந்தனர். 2014-ம் ஆண்டு குட்கா குடோனில் போலீசார் சோதனை நடத்திய பின்னர் அதன் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல் விட்டு விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் குட்கா ஊழல் நடைபெற்றதாக புகாரும் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாகவே சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். குட்கா ஊழலில் கைமாறிய பணம் எவ்வளவு. அதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. எனவே 5 நாள் விசாரணைக்கு பின்னர் குட்கா ஊழலில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkhaScam #CBI
    Next Story
    ×