search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஆமைவேகத்தில் நடைபெறும் குடிநீர்தொட்டி கட்டுமான பணிகள்
    X

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஆமைவேகத்தில் நடைபெறும் குடிநீர்தொட்டி கட்டுமான பணிகள்

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஆமைவேகத்தில் குடிநீர் தொட்டி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை நகராட்சி 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தஞ்சை மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 36.61 சதுர கி.மீ. ஆகும். தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இந்த தஞ்சையில் உலகப்புகழ்பெற்ற பெரியகோவில், அரண்மனை, அருங்காட்சியகம், சரசுவதி மகால் நூலகம், சிவகங்கை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளன.

    தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு திருமானூரில் உள்ள கொள்ளிடம் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. திருமானூரில் இருந்து தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தஞ்சை மாநகர பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகின்றன.

    இது தவிர தஞ்சை மாநகரில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறும் அமைக்கப்பட்டு மோட்டார் பொருத்தியும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.45 கோடியே 69 லட்சம் செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள குழாய்கள் பதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அதனை அகற்றி விட்டு புதிய குழாய்கள் பதிக்க முடிவுசெய்யப்பட்டு ரூ.15 கோடியே 65 லட்சம் மதிப்பில் புதிய குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இருப்பினும் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தன. இதையடுத்து தஞ்சை மாநகரில் 7 இடங்களில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 4, 7, 9, 20, 40, 44, 51 ஆகிய வார்டுகளில் குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு கடந்த 2015-ம் ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதன்படி 7 இடங்களிலும் ரூ.6 கோடியே 70 லட்சம் செலவில் மேல்நிலைகுடிநீர் தொட்டிகள் கட்டும் பணிகள் தொடங்கின.

    இந்த குடிநீர் தொட்டிகள் 1½ லட்சம், 7½ லட்சம், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை ஆகும். இந்த குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுகிறது. தஞ்சை 44-வது வார்டில் ராஜீவ்நகரில் குடிநீர் தொட்டி கட்டும் பணிகள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. இன்னும் பணிகள் நிறைவு பெறவில்லை. இதே போல் மற்ற இடங்களிலும் பணிகள் நிறைவடையவில்லை.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு இடங்களில் நீர்த்தேக்க தொட்டி கட்டி குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் துரிதப்படுத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்”என்றனர். 
    Next Story
    ×