search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பூர், காசிமேட்டில் 5 இடங்களில் வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேர் கைது
    X

    பெரம்பூர், காசிமேட்டில் 5 இடங்களில் வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேர் கைது

    பெரம்பூர் மற்றும் காசிமேட்டில் 5 இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட 6 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    பெரம்பூர் பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனியை சேர்ந்தவர் ரேவதி (38).

    இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 8.30 மணியளவில் வேலை முடிந்து மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    வீட்டின் அருகே ரேவதி வந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், ரேவதி கழுத்தில் கிடந்த 15 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர். அவர் ‘திருடன் திருடன்’ என்று கத்தினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பூர் வெற்றிநகர் ராஜா தோட்டத்தை சேர்ந்தவர் அப்துல் அமீது (77). இவர் ஒரு அமைப்பின் பொறுப்பாளராக இருக்கிறார்.

    நேற்று இரவு 9 மணிக்கு அப்துல் அமீது ரூ.1 லட்சம் பணத்தை ஒரு பையில் கொண்டு வந்தார். வீட்டின் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவருடைய கையில் இருந்த பணப்பையை பறித்து சென்றனர். அவர் சத்தம் போட்டும் பயன் இல்லை. இதுபற்றி திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    வெற்றிநகர் வரதன் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் ஸ்ரீதர் (16). பள்ளி மாணவர். இவர் நேற்று இரவு 8 மணியளவில் டியூ‌ஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். செல்போனில் பேசிக் கொண்டே நடந்து வந்தார்.

    அப்போது, ஒரு ஆட்டோவின் அருகே நின்று கொண்டிருந்த 4 பேர், மாணவன் ஸ்ரீதரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டனர். இது குறித்து திரு.வி.க நகர் போலீசில்புகார் செய்யப்பட்டது.

    போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த வழிப்பறியில் ஈடுபட்ட அஜீத், அப்பாஸ், மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 2 சேல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்ற வழிப்பறி சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    காசிமேடை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜீத். இவர் சூர்யநாராயண தெருவில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அஜித்திடம் இருந்த செல்போனை பறித்து தப்பினர்.

    இதே போல் ராயபுரம் மேம்பாலம் அருகே சித்ரா என்பவரிடம் மர்மநபர்கள் செல்போனை பறித்தனர். இதுபற்றி காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் விசாரணை நடத்தினார்.

    செல்போன் பறிப்பில் ஈடுபட்ட புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்த தமிழ் செல்வன், கொருக்குபேட்டை மணி கண்டன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×