search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாஜ்பாய் மறைவையொட்டி கோவையில் 3 தனியார் பஸ்களை உடைத்த 6 வாலிபர்கள் கைது
    X

    வாஜ்பாய் மறைவையொட்டி கோவையில் 3 தனியார் பஸ்களை உடைத்த 6 வாலிபர்கள் கைது

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கடந்த 17-ந் தேதி கோவையில் 3 தனியார் பஸ்களை உடைத்த 6 வாலிபர்களை கண்காணிப்பு காமிரா மூலம் போலீசார் கைது செய்தனர். #vajpayee
    கோவை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கடந்த 17-ந் தேதி கோவையில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல ஓடின.

    இந்நிலையில் காந்திபுரத்தில் இருந்து சித்ரா சந்திப்பு நோக்கி சென்ற பஸ், ஒண்டிப் புதூரில் இருந்து மணியகாரம்பாளையம் நோக்கி வந்த பஸ் ஆகிய இரண்டு தனியார் பஸ்களை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வைத்து மர்ம நபர் கள் கல் வீசி உடைத்தனர்.

    இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பீளமேடு பகுதியிலும் ஒரு தனியார் பஸ் கண்ணாடியை மர்மநபர்கள் அடித்து உடைத்தனர். அடுத்தடுத்து 3 தனியார் பஸ்கள் உடைக்கப்பட்டது நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்து பஸ்கள் மீது கற்களை வீசியும், கம்பியால் பஸ்சின் பின்புற கண்ணாடியை அடித்து உடைப்பதும் தெரிய வந்தது.

    இந்த காமிரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் பஸ்களை உடைத்த வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதனடிப்படையில் பஸ்களை உடைத்ததாக கோவை கணபதி பகுதியை சேர்ந்த தீனதயாளன்(26), மூர்த்தி(23), ஆவாரம்பாளையத்தை சேர்ந்த கோகுல்(22), பிரதீப்(22), சவுரிபாளையத்தை சேர்ந்த சதீஷ் குமார் (24), அசோக்குமார்(21) ஆகிய 6 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் தீனதயாளன் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது. இவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான 6 பேரும் நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 6 பேரையும் வருகிற 6-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    இதையடுத்து 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #vajpayee
    Next Story
    ×