search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    X

    அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PhysicalEducationTeachers
    சென்னை:

    நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீசாந்தி விஜயா உயர்நிலைப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது.

    இதை எதிர்த்து பள்ளியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆசிரியர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், கடந்த 1997-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கல்யாணசுந்தரம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உடற்கல்வி அத்தியாவசியமானது. 5 வயது முதல் 18 வயது வரை யோகா உள்ளிட்ட உடற்கல்வியை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

    250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க முடியும் என்பது ஏற்புடையது அல்ல. அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். எனவே, 250-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் கவுரவ ஊதிய அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களை தமிழக அரசு பணியமர்த்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #PhysicalEducationTeachers

    Next Story
    ×