search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.
    X
    வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

    வீராணம் ஏரியிலிருந்து விவசாயத்துக்கு 26-ந் தேதி தண்ணீர் திறப்பு

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 26-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    தற்போது கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 1524 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு 1524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 45.80 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

    கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தது. தண்ணீரைசேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக் கட்டுக்கு நேற்று 1100 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று அந்த அணைகட்டுக்கு 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    பின்னர் அந்த தண்ணீர் வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கால்வாய்கள் தூர்வாரும்பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முடிந்த உடன் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் வீராணம் ஏரி நிரம்பி உள்ளதால் தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 26-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  #VeeranamLake
    Next Story
    ×