search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் ஏரியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 200 வீடுகள் இடித்து அகற்றம்
    X

    பண்ருட்டியில் ஏரியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 200 வீடுகள் இடித்து அகற்றம்

    பண்ருட்டியில் இன்று ஏரியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 200 வீடுகளை இடித்து அதிகாரிகள் அகற்றம் செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியில் உள்ள கடலூர் சாலையில் 10 ஏக்கர் பரப்பளவில் செட்டிபட்டறை ஏரி அமைந்துள்ளது.

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியின் மேடான பகுதியில் 200 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில் வரும் 24-ந் தேதிக்குள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் இடங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து செட்டிபட்டறை ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்கு சென்ற அதிகாரிகள், ஏரியில் உள்ள ஆக்கிரப்பு வீடுகள் இடிக்கப்படும்.எனவே வேறு இடங்களுக்கு செல்லுங்கள் என்று அங்கு வசிக்கும் மக்களிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அவர்கள் காலி செய்யவில்லை.

    இதையடுத்து இன்று காலை பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் சிவராமன் மற்றும் அதிகாரிகள் செட்டிபட்டறைக்கு வந்தனர். பாதுகாப்புக்காக போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வருமாறு ஓலிபெருக்கி மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதை கேட்டு பொதுமக்கள் அனைவரும் வெளியே வந்தனர். அவர்களிடம் கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று இடித்து அகற்றப்படும் என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசபேச்சுவார்த்தை நடத்தினர். உங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதையடுத்து 3 பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதை பார்த்து பெண்கள் கதறி அழுதனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    Next Story
    ×