search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு- 14 விவசாயிகள் மீது வழக்கு
    X

    செங்கத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு- 14 விவசாயிகள் மீது வழக்கு

    செங்கத்தில் அரசுக்கு எதிராக போராடியதாக 14 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. #greenwayroad
    செங்கம்:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை விரைவு சாலைக்கு, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி செங்கம் மேல்வணக்கம்பாடி காந்திநகரை சேர்ந்த சேகர் என்ற விவசாயி தன்னுடைய நிலம் கைப்பற்றப்பட்டதால் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில், செங்கம் தாலுகாவிற்குட்பட்ட நீப்பந்துறை முதல் நயம்பாடி வரை 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி சேகருக்கு அஞ்சலி செலுத்தி பசுமை சாலை பணியை நிறுத்தக்கோரி ஒன்றிணைந்து பேரணி சென்று போராட்டம் நடத்த போவதாக தகவல் பரவியது.

    இதையறிந்த போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு செங்கம் தாலுகா முறையாறு பகுதியை சேர்ந்த விவசாயி கருணாநிதி (55), மண்மலை இளங்கோ (45), அத்திப்பாடி செல்வராஜ் (50) மற்றும் புதுப்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் ஆகியோர் உள்பட மொத்தம் 14 விவசாயிகளை வீடு புகுந்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.

    மேலும் கரியமங்கலம், நீப்பந்துறை, கட்டமடுவு உள்பட பல்வேறு கிராமங்களிலும் போலீசார் நள்ளிரவு முதல் விடிய, விடிய விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று கதவை தட்டி கைது செய்வதாக கூறி தொந்தரவு செய்துள்ளனர். இதனால் பல விவசாயிகள் போலீசாருக்கு பயந்து ஊரை விட்டு வெளியே சென்று தலைமறைவாகினர்.

    கைது செய்யப்பட்ட விவசாயிகளில் செல்வராஜ் என்பவர் தர்மபுரி மாவட்டம் ஆத்திப்பாடியை சேர்ந்தவர். இவருடைய நிலம், செங்கம் பகுதியில் இருப்பதால் அவரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 14 பேர் மீதும் அரசுக்கு எதிராக போராடியதாக 151-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். செங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    நேற்றிரவு கைது செய்யப்பட்ட 14 விவசாயிகளையும் சொந்த ஜாமீனில் போலீசார் விடுவித்தனர். அவர்களிடம் 8 வழிச்சாலைக்கு எதிராக நடைப்பயணம், பேரணி, போராட்டம் என ஈடுபட்டால் அதிகபட்ச நடவடிக்கை பாயும் என போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதுப்பற்றி விவசாயிகள் கூறுகையில், 8 வழிச்சாலை திட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை பாதிப்பாக உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், விவசாயிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.

    நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை. குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த எங்களை நள்ளிரவில் கைது செய்வதற்கு நாங்கள் தேச விரோதிகளா? என்று குமுறினர்.

    இதற்கிடையே, செங்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான போலீசார் விவசாயிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால், அங்கு பதட்டமான சூழல் காணப்படுகிறது. #greenwayroad
    Next Story
    ×