என் மலர்
செய்திகள்

கோவையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மாணவர் உள்பட 3 பேர் கைது
கோவை:
கோவை மாநகரில் சமீப காலமாக சாலையில் நடந்து செல்பவர்களிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதில் ஈடுபடுபவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விபின்(வயது 18), வடகோவையை சேர்ந்த கார்த்திக்(18), தடாகம் ரோட்டை சேர்ந்த ரோகித்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்களில் கார்த்திக் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
விபின் கார் மெக்கானிக் ஆவார். ரோகித் வாஷிங்மிஷின் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார்.
நண்பர்களான இவர்கள் 3 பேரும் சொகுசாக வாழ ஆசைப்பட்டு செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக கூறினார். இவர்களிடம் இருந்து 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






