என் மலர்
செய்திகள்

நீலகிரியில் இருந்து வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன
கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீலகிரியில் இருந்து வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன #KeralalRain
ஊட்டி:
கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம் உள்பட பல்வேறு மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால், அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி வயநாடு மாவட்ட கலெக்டர் அஜய்குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குமாறு நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து நீலகிரி மாவட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்பு சார்பில் கேரட், பீட்ரூட் உள்பட 3 டன் காய்கறிகள், பருப்பு, அரிசி, வேட்டி, சட்டை போன்றவை ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஒரு லாரியில் ஏற்றப்பட்டது. ஊட்டி நகராட்சி மற்றும் சமூக நலத்துறை சார்பில் நாப்கின்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், டி-சர்ட்டுகள், பேண்ட்கள், சோப்பு, அரிசி, பால் பவுடர், பிஸ்கட், ரொட்டி, ஜாம், ஹார்லிக்ஸ் உள்ளிட்டவை ஏற்றப்பட்டன. ஊட்டி தங்க நகை வியாபாரிகள் சார்பில் சரக்கு வாகனங்களில் கம்பளி ஆடைகள், ரெடிமேடு ஆடைகள், போர்வை, படுக்கை, மருந்து, மாத்திரைகள் ஆகியவை வயநாடு மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் மூலம் ரூ.25 ஆயிரம் நிவாரண உதவியாக வயநாடு கலெக்டருக்கு அனுப்பப்பட்டது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மேற்கண்ட பொருட்களை பார்வையிட்டு அனுப்பி வைத்தார். அப்போது தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி, சமூகநல அலுவலர் தேவகுமாரி உள்பட பலர் உடனிருந்தனர். #KeralalRain
Next Story






