search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாஜ்பாய் மறைவு: குமரியில் கடைகள் அடைப்பு- பஸ்கள் மீது கல்வீச்சு
    X

    வாஜ்பாய் மறைவு: குமரியில் கடைகள் அடைப்பு- பஸ்கள் மீது கல்வீச்சு

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி குமரியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    நாகர்கோவில்:

    முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவருமான வாஜ்பாய் நேற்று மரணம் அடைந்தார்.

    வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பாரதிய ஜனதா கட்சியினரும், பொதுமக்களும் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்திலும் அவரது படத்துக்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    வாஜ்பாய் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில், கோட்டார், வடசேரி, மீனாட்சிபுரம் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    காலையில் சில கடைகள் திறந்து இருந்தன. பிறகு அந்த கடைகளும் மூடப்பட்டன. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் லாட்ஜூகளில் முடங்கி கிடந்தனர். சின்ன முட்டம் விசைப்படகு மீனவர்களும் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

    தக்கலை, பத்மனாபபுரம், குலசேகரம், திருவட்டார், இரணியல் போன்ற இடங்களிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. நித்திரவிளை போன்ற பகுதிகளில் சில கடைகள் திறந்திருந்தன.

    வாஜ்பாய் மரணத்தைத் தொடர்ந்து அசம் பாவிதங்களை தடுக்க குமரி மாவட்டத்தில் கிராம புறங்களில் இரவு தங்கும் ஸ்டேபஸ்களை டெப்போவுக்கு கொண்டுச் செல்ல உத்தரவிடப்பட்டது. இதனால் அனைத்து பஸ்களும் இரவு டெப்போவுக்கு திரும்பின. ராணித்தோட்டம், விவேகானந்தபுரம் உள்பட 11 அரசு டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்களில் இன்று காலை பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக காலை 4.30 மணி முதல் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்ளுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று அதிகாலையில் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளானார்கள்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் 5 என்டு டூ என்டு பஸ்களையும், மதுரைக்கு ஒரு பஸ்சையும் காலை 6 மணிக்கு இயக்கினார்கள். இந்த பஸ்களில் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து இதே போல 6 பஸ்களாக இயக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு பிறகு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. கிராம புறங்களுக்கும் பஸ்கள் சென்றன. வடசேரி பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே கருங்கல் பகுதியில் 3 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. கருங்கல் அருகே பாலூர் பகுதியில் மேல்மிடாலத்தில் இருந்து கருங்கல் நோக்கிச் சென்ற அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.



    இதே போல ஐரேனியபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசினார்கள். மூசாரி பகுதியில் குளச்சலில் இருந்து திருவட்டார் நோக்கி அரசு பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது.

    பஸ்கள் அடுத்தடுத்து கல் வீசி உடைக்கப்பட்டதையடுத்து கருங்கல் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    Next Story
    ×