search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டது - ஐகோர்ட் நீதிபதி கடும் அதிருப்தி
    X

    சென்னை மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டது - ஐகோர்ட் நீதிபதி கடும் அதிருப்தி

    சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெறமுடியவில்லை, மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்று ஐகோர்ட்டு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ஷெனாய்நகர் பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி லட்சுமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி இருந்தார். மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளையும், விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி வக்கீல் எடுத்துக்கூறினார்.

    இந்த விவகாரத்தில் மாநகராட்சியின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். பின்னர், விதிமீறல் கட்டிடங்களை தடுக்க மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது சென்னை மக்களை விரக்தி அடைய செய்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

    விதிமீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய நீதிபதி, மாநகராட்சி எல்லைக்குள் கட்டிட பணிகளை மேற்கொள்ள விதிகளை பின்பற்றி ஒப்புதல்கள் வழங்கப்படுகிறதா?, விதிமீறல் கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பதில் அளிக்க மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

    சென்னை மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, லஞ்சம் கொடுக்காமல் சென்னை மாநகராட்சியில் கட்டிட ஒப்புதல் உள்ளிட்ட எந்த சான்றிதழும் பெறமுடியாத நிலை இருந்து வருவதாகவும், இதன் காரணமாக மக்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.

    பின்னர், ஊழலில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்கள், ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு பிரிவின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதாக லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) ஆய்வு கூட்டத்தில் உத்தரவாதம் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
    Next Story
    ×