search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள் நலனுக்காக தனித்துறை உருவாக்கினால் என்ன? - மத்திய அரசுக்கு, ஐகோர்ட் கேள்வி
    X

    குழந்தைகள் நலனுக்காக தனித்துறை உருவாக்கினால் என்ன? - மத்திய அரசுக்கு, ஐகோர்ட் கேள்வி

    குழந்தைகள் நலனுக்காக தனித்துறை உருவாக்கினால் என்ன? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
    சென்னை:

    சென்னை அருகே 15 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்ததாக வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘குழந்தைகளை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று 2015-ம் ஆண்டு தெரிவித்தார்.

    இந்த உத்தரவை மத்திய அரசு முறையாக அமல்படுத்தவில்லை என மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் நேற்று விசாரித்தார்.

    அப்போது, ‘குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு வெளிநபர்கள் மட்டும் காரணம் அல்ல. பெற்றோரும் காரணமாக உள்ளனர். 7 மாதங்களாக ஒரு சிறுமியை பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுமியின் தாயார் என்ன செய்துகொண்டு இருந்தார்? தன் மகளை கூட கவனிக்க முடியாதா? கூட்டுக்குடும்ப முறை ஒழிந்ததால், பெரியவர்களின் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றனர். திருமணமானவுடன் தனிக்குடித்தனம் என்றாகிவிட்டது. இதில் சில நன்மை இருந்தாலும், சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    மேலும், ‘விவாகரத்து பெற்றவர்களின் குழந்தை தாயிடம் மட்டுமோ அல்லது தந்தையிடம் மட்டுமோ வாழ்வதால் மனதளவில் பாதிக்கப்படுகிறது. இருவருடனும் சேர்ந்து குழந்தை வளர்ந்தால் தான் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து, ‘குழந்தைகள் நலன் கருதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையை, பெண்கள் நலத்துறை என்றும், குழந்தைகள் நலத்துறை என்றும் மத்திய அரசு இரண்டாக பிரித்தால் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து மத்திய அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
    Next Story
    ×