என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் பெற்றோர் கொதிப்பு
    X

    மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் பெற்றோர் கொதிப்பு

    அரசு பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் அடித்து காயப்படுத்தியதால் பெற்றோர்கள் அத்திரமடைந்தனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.கோம்பை அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் மோகன்தாஸ். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழவே இவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்களும், பெற்றோர்களும் புகாரளித்து வந்தனர்.

    இவர் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் துறை ரீதியான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் கடந்த 6-ந் தேதி மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக புகாரளித்தனர்.

    நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் 4 பேரை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்துள்ளார். காயமடைந்த மாணவர்கள் திவாகர், மருதுபாண்டி, சபரி உள்பட 4 பேர் இது குறித்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

    தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் தூண்டுதலின் பேரில்தான் ஆசிரியர் பெரியசாமி மாணவர்களை தாக்கியதாக பெற்றோர்கள் ஆத்திரமடைந்து இது குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர்.

    தாக்குதலில் காயமடைந்த மாணவன் சபரி தனக்கு இந்த பள்ளியில் படிக்க பயமாக இருக்கிறது என்று கூறி மாற்றுச்சான்றிதழை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீதும் இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பாலமுருகன், சண்முகம் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

    இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை வகுப்புக்குள் அனுப்பாமல் அங்குள்ள கோவிலில் நிறுத்தி வைத்தனர். இதனால் ஆசிரியர் ஒருவர் அவர்களை மிரட்டி பள்ளிக்குள் போக வைத்துள்ளார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் மீதும், பள்ளி மீதும் புகார் வந்து கொண்டிருப்பதால் கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை உணர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தும் நிலைக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தள்ளப்படுவார்கள்.

    புகார் தெரிவித்த பெற்றோர்கள் இன்று எரியோடு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    Next Story
    ×