search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவைகுண்டம் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
    X

    ஸ்ரீவைகுண்டம் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

    ஸ்ரீவைகுண்டம் அருகே கூட்டுறவு வங்கி கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் கொள்ளையடிக்க முடியாமல் திரும்பியதால் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் தப்பின.
    ஸ்ரீவைகுண்டம்:

    ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆலடியூரில் பேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி காவலாளியாக கோபால் கணேசன் என்பவர் உள்ளார். நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. காவலாளி கோபால் கணேசன் மட்டும் பணியில் இருந்தார். இரவில் அவர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    அந்த வேளையில் மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். வங்கியின் முன்பக்க கிரில் கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் வங்கி லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். அது முடியாததால் அங்கிருந்து சென்றுவிட்டனர். இன்று காலையில் வங்கியின் தற்காலிக பணியாளர் முத்துமாரி வங்கிக்கு வந்தார்.

    அப்போது வங்கியின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வங்கி ஜன்னலையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி வங்கி செயலர் கணபதிமள்ளு என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாயஜோஸ், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். வங்கியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    வங்கி லாக்கரில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்தன. கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாமல் சென்றதால் அந்த நகைகள் அனைத்தும் தப்பின. இந்த் கொள்ளை முயற்சி சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×