search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் கருணாநிதி படத்துக்கு தொண்டர்கள் மலர் அஞ்சலி
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் கருணாநிதி படத்துக்கு தொண்டர்கள் மலர் அஞ்சலி

    திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் அவரது படத்துக்கு தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பல இடங்களில் திமுக கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    விழுப்புரம்:

    தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மரணம் அடைந்தார்.

    இதையொட்டி துக்கத்தை அனுசரிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. சாலையோரங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. விழுப்புரம் வண்டிமேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கருணாநிதி உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதற்கு தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கதறி அழுதனர். ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். விழுப்புரம் மாவட்டமே சோகமயமாக காட்சியளித்தது. கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ஏராளமான தி.மு.க.வினர் வாகனங்களில் சென்றனர்.

    கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் புதிய பஸ் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிந்தது. சிலர் படிக்கட்டில் தொங்கியபடியே சென்றனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    Next Story
    ×