search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் 5 பஸ்கள் கல் வீசி உடைப்பு- 2-வது நாளாக பஸ்கள் நிறுத்தம்
    X

    சேலம் மாவட்டத்தில் 5 பஸ்கள் கல் வீசி உடைப்பு- 2-வது நாளாக பஸ்கள் நிறுத்தம்

    திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கொடுக்க தமிழக அரசு மறுத்ததன் எதிரோலியாக 2-வது நாளாக இன்றும் சேலம் மாநகரில் இருந்து வெளியூருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
    சேலம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கியது.

    சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை மெரீனா பீச்சில் கலைஞரை அடக்கம் செய்ய இடம் கொடுக்க தமிழக அரசு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.தொண்டர்கள் ஆங்காங்கு திரண்டனர்.

    சேலம் பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் மாநகர துணை செயலாளர் பழக்கடை வி.கணேசன் தலைமையில் திரண்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே போல எடப்பாடி, மகுடஞ்சாவடி, மேட்டூர் புதுச்சாம்பள்ளி உள்பட பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

    திருச்சியில் இருந்து சேலம் நோக்கி நேற்றிரவு வந்த அரசு பஸ்சை கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் அருகே மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு சென்ற அரசு பஸ் நரசிங்கபுரம் பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் திடீரென கல் வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    இதே போல ஆத்தூர் அருகே உள்ள எடப்பட்டியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.ஆத்தூர் பகுதியில் மேலும் 2 பஸ்களின் கண்ணாடிகள் கல் வீசி உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்து ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செழியன் உள்பட சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விட்டு விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு பஸ்களை எடுத்து சென்றனர். இதனால் நேற்றிரவு வெளியூர் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர்.

    2-வது நாளாக இன்றும் சேலம் மாநகரில் இருந்து வெளியூருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதே போல புறநகர் பகுதிகளான ஓமலூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி என மாவட்டம் முழுவதும் பஸ்கள் இயங்கவில்லை.

    இதனால் பஸ் நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் ஓடாததால் அவசர தேவைக்கு கூட வெளியூர் செல்ல முடியாமல் பொது மக்கள் தவித்தனர். இதனால் ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் இருந்தது. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    Next Story
    ×