search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் அமோக விளைச்சல்- வாழைத்தார்கள் விலை சரிவு
    X

    குமரி மாவட்டத்தில் அமோக விளைச்சல்- வாழைத்தார்கள் விலை சரிவு

    குமரி மாவட்டத்தில் வாழை விளைச்சல் அதிகமாக இருப்பதால் வாழைத்தார்கள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வாழை மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஒகி புயல் தாக்குதலின் போது குமரி மாவட்டத்தில் பல லட்சம் வாழைகள் முறிந்து விழுந்தன. இதனால் வாழை விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

    இதன்பிறகு மீண்டும் குமரி மாவட்டத்தில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த முறை ரப்பர் தோட்டங்களிலும் ஊடு பயிராக வாழை பயிரிடப்பட்டது. மேலும் புயலால் ரப்பர் மரங்கள் சேதம் அடைந்த தோட்டங்களிலும் ரப்பருக்கு பதில் பலரும் வாழைகளேயே பயிரிட்டனர். இதனால் வாழை சாகுபடி பரப்பளவு அதிகரித்தது.

    இந்த நிலையில் பருவ மழையும் விவசாயிகளுக்கு கைகொடுத்தது. இதனால் வாழைகள் அமோக விளைச்சலை கண்டுள்ளன. தொடர்ந்து வாழைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைத்து வருவதால் வாழைத்தார்கள் சந்தைகளுக்கு விற்பனைக்காக அதிகளவு வரத் தொடங்கி உள்ளது.

    விளைச்சல் அதிகமாக இருப்பதால் வாழைத்தார்கள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. குலசேகரம் பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகள் குலசேகரம் சந்தையில் அதிகளவு விற்பனையாகிறது. செவ்வாழைத்தார்கள் கிலோ ரூ.35 என்ற குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. நேந்திரன் வாழைகள் கிலோ ரூ.45- க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    அதேபோல் மட்டி உள்பட பல ரக வாழைத்தார்களும் குறைந்த விலைக்கே விற்பனையாகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிகளவு நடைபெறாது. இதனால் வாழைத்தார்கள் தேவையும் குறைந்து உள்ளது. அதே சமயம் தொடர்ந்து வாழைகள் அதிகளவு சந்தைக்கு வருவதால் அதன் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் வாழை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    Next Story
    ×