search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் டிரைவர் படுகொலை: கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்
    X

    மேலூர் டிரைவர் படுகொலை: கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்

    டிராக்டர் டிரைவர் படுகொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மேலூரில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள மேலவளவு போலீஸ் சரகத்துக்குட்பட்ட பட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரீஸ்வரன் (வயது 21). டிராக்டர் டிரைவரான இவரை, நேற்று மர்ம கும்பல் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கியது.

    இதில் பலத்த காயம் அடைந்த சபரீஸ்வரன், மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சபரீஸ்வரன் உடலை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல போலீசார் முயன்றனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனக்கூறிய அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மேலூர், மேலவளவு, பட்டூர் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.

    இன்று காலை சபரீஸ்வரனின் உறவினர்கள், ஆஸ்பத்திரி முன்புள்ள அழகர்கோவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வந்தார். அவர் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார்.

    இந்த நிலையில் மேலூர் பஸ் நிலையம் முன்பு 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரண்டு மறியல் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியும், மறியல் கைவிடப்பட வில்லை. கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×