search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி அருகே லாரி மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
    X

    தருமபுரி அருகே லாரி மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

    லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் தருமபுரி அருகே லாரி மீது மர்ம கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #lorryStrike
    தருமபுரி:

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 8-வது நாளாக லாரிகள் உரிமையாளர் சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த போராட்டத்திற்கு பல்வேறு லாரி சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரிகள் பென்னாகரம் மெயின்ரோட்டில் வரிசையாக நிறுத்தியுள்ளனர். மேலும் சில லாரிகளை பெட்ரோல் பங்குகளிலும் நிறுத்தி உள்ளனர்.

    போராட்டத்தை மீறி லாரிகளை இயக்குபவர்களை சங்க உறுப்பினர்கள் வழிமறித்து தங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டு கொண்டனர்.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு தருமபுரி வழியாக வந்த 4 லாரிகள் மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதில் ஒரு லாரி டிரைவருக்கு காயங்கள் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். லாரிகள் மீது கல்வீசியவர்களை போலீசார் தேடிவந்தனர்.

    இந்த கல்வீச்சு சம்பவத்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளாத சங்கத்தினர் தருமபுரி வழியாக லாரிகளை இயக்குவதற்கு தயங்கி வந்தனர்.

    சேலம் மாவட்டம் டேனீஸ்பேட்டையைச் சேர்ந்தவர் செல்லபிள்ளை (வயது 49). இவர் நேற்று ஜல்லிகற்களை ஏற்றிக் கொண்டு தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த ராணிமூக்கனூருக்கு வந்தார். அப்போது அங்கு ஜல்லிகற்களை அங்கு இறக்கி விட்டு மீண்டும் சேலத்திற்கு லாரியை எடுத்து கொண்டு சென்றார்.

    லாரியில் டீசல் குறைவாக இருந்ததால் கடத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்றார். திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் லாரியின் முன்பக்கமாக வந்து வழிமறித்தனர். அவர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கற்களை கொண்டு லாரியின் மீது விசினர். இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது.

    இதுகுறித்து செல்ல பிள்ளை கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #lorrystrike
    Next Story
    ×