search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு - 873 பேர் ஆட்சேபனை மனு
    X

    திருவண்ணாமலையில் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு - 873 பேர் ஆட்சேபனை மனு

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்கு நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 873 விவசாயிகள் ஆட்சேபனை மனுக்கள் அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே 277 கிலோ மீட்டர் தொலைவில் 8 வழி பசுமைச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ள நிலையில், சாலை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை சாலை அமையும் 122 கிலோ மீட்டர் தொலைவில் நிலங்களை அளவீடு செய்து எல்லை குறியீடு கற்களை பதிக்கும் பணியை, விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தை மீறி அதிகாரிகள் போலீசாரின் அடக்குமுறையோடு முடித்துள்ளனர். இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது குறித்து விவசாயிகள் கருத்து தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    நிலம் கையகப்படுத்த ஆட்சேபனை மனுக்கள் அளிக்க கூடுதலாக வழங்கப்பட்ட 15 நாட்கள் அவகாசமும் நேற்றுடன் முடிந்துவிட்டது.

    அதன்படி 873 விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனுக்கள் அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கூடுதல் இழப்பீடு மற்றும் அரசு வேலை வாய்ப்பு மாற்று இடம் போன்றவற்றை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

    பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை நடைபயணம் நடக்கிறது. வரும் 1-ந் தேதி, திருவண்ணாமலை அண்ணா சிலையில் இருந்து தொடங்கும் நடைபயணத்தை, அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.

    திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை 170 கிலோ மீட்டர் தூரம் இந்த நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தெரிவித்தார்.
    Next Story
    ×