search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடந்த 2017-ம் ஆண்டில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம்
    X

    கடந்த 2017-ம் ஆண்டில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம்

    கடந்த 2017-ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து, மத்திய சுற்றுலாத்துறை கடிதம் வழங்கியுள்ளது. #Domestic #ForeignVist #Tourist
    சென்னை:

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    உலகின் பழமையான கலாசாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், பிரமிக்கத்தக்க கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, மனதை வசீகரிக்கும் இயற்கைத் தோற்றங்கள், வனப்பகுதிகள் மற்றும் யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளன.

    எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்வதில் தமிழ்நாடு தொடர்ந்து தனிச்சிறப்புடன் திகழ்ந்து வருகிறது. இதுபோன்ற சுற்றுலாச் சிறப்புகளைக் கொண்ட தமிழ்நாடு, கடந்த 2017-ம் ஆண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்றது.

    இதை மத்திய அரசின் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகவும்; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகவும் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்று வந்துள்ளது.

    2017-ம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.

    2017-ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து, மத்திய சுற்றுலாத்துறை கடிதம் வழங்கியுள்ளது. இந்தக் கடிதத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிகழ்வின்போது, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, சுற்றுலா ஆணையர் பழனிக்குமார் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Domestic #ForeignVist #Tourist #tamilnews
    Next Story
    ×