search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி, கமலுக்கு 10 சதவீத ஆதரவு கூட இல்லை - தந்தி டி.வி. கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்கள்
    X

    ரஜினி, கமலுக்கு 10 சதவீத ஆதரவு கூட இல்லை - தந்தி டி.வி. கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்கள்

    தமிழக அரசியல் களத்தில் ரஜினி, கமல் இருவருக்கும் எந்த அளவுக்கு ஆதரவு இருப்பதாக மக்களிடம் தந்தி டி.வி. நடத்திய கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. #Rajinikanth #KamalHaasan
    சென்னை:

    ஜெயலலிதா மரணம், தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல்நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி, ஓய்வு பெற்று வருவது, அந்த வெற்றிடத்தின் தாக்கத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

    இந்த நிலையில் பிரபல நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் தமிழக அரசியலில் ஈடுபட போவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர். எம்.ஜி.ஆர். பாணியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டமாக உள்ளது. ஆனால் அதை நோக்கிய அனைத்து செயல்பாடுகளிலும் இருவரும் மாறுபட்டு காணப்படுகிறார்கள்.

    கட்சி தொடக்கம், கொடி, கொள்கை, உள் கட்டமைப்பு என அனைத்து வி‌ஷயங்களிலும் ரஜினி, கமல் இருவரும் வேறு, வேறு பாதையில் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். கமல்ஹாசன் மதுரையில் “மக்கள் நீதி மய்யம்” கட்சி தொடக்க விழாவை நடத்தினார். பிறகு மாநிலம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் இதுவரை அவரால் அந்த பயணத்தைத் தொடங்க முடியவில்லை.


    சமீபத்தில் கட்சி நிர்வாகிகளை மாற்றி சீரமைத்த கமல்ஹாசன், உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தியுள்ளார். ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளனர் என்பது தங்கமலை ரகசியம் போல் உள்ளது.

    கமல்ஹாசனாவது அரசியலுக்கு வந்த வேகத்தில் கட்சியைத் தொடங்கி காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார். ரஜினியோ அரசியலில் குதிக்கப் போவதாக 6 மாதத்துக்கு முன்பு சொல்லி விட்டு, இன்னமும் குதிக்காமலே உள்ளார். 1 கோடி பேரை உறுப்பினராக சேர்த்து விட்டுத்தான் கட்சித் தொடங்க வேண்டும் என்ற திட்டத்துடன் ரஜினி இருக்கிறார்.

    இதற்காக தனது ரசிகர் மன்றத்தை அவர் “மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றினார். ஆனால் ரஜினி எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மன்றத்தில் பொதுமக்கள் அலை, அலையாக வந்து தங்களை உறுப்பினராக பதிவு செய்யவில்லை. இதனால் ரஜினி இப்போதைக்கு தனது படப்பிடிப்புகளில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகளை ரஜினி நியமனம் செய்துள்ள போதிலும், அந்த நிர்வாகிகளை நெறிப்படுத்தி, வழி நடத்த சரியான வலதுகரம் ரஜினிக்கு இல்லை. இதனால் ஒரு கட்டத்துக்கு மேல் “ரஜினி மக்கள் மன்றம்“ செயல்பட முடியாமல் உள்ளது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.


    ஆடி மாதம் முடிந்த பிறகு ஆவணியில் கட்சி ஆரம்பிப்பார், ஐப்பசியில் கட்சி ஆரம்பிப்பார்...... என்று வெளியாகும் தொடர் தகவல்கள் ரஜினி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து, சலிப்பை ஏற்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள்.

    ரஜினி, கமல் இருவரும் அரசியல் கடல் அலையில் இப்படி அல்லாடி கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களிடம் உண்மையிலேயே எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள மக்களிடம் ஆர்வமும் எதிர்பார்ப்பும் உள்ளது. ரஜினி, கமல் இருவருக்கும் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிர்ணயிக்கப் போவது தேர்தல்தான். அவர்கள் இருவரும் முதலில் சட்டசபை தேர்தல் களத்தை சந்திக்காமல், பாராளுமன்ற தேர்தல் களத்தை சந்திக்க உள்ளனர்.

    இன்னும் 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அட்டவணை வெளியிடப்பட்டு விடும். காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. உள்பட தமிழக கட்சிகள் தங்களை தயார்படுத்தத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் ரஜினி, கமல் தேறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


    இந்த எதிர்பார்ப்புகளுக்கு விடை தரும் வகையில் ‘தந்தி’ டி.வி. கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. கடந்த தேர்தலில் ‘தந்தி’ டி.வி. வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள் துல்லியமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று துல்லியமான முடிவுகளை தருவதற்காக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், ஒரு மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் மொத்தம் 8,250 பேரிடம் தனித்தனியாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இவர்களில் 4,125 பேர் ஆண்கள்; 4,125 பேர் பெண்கள்.

    ஜூலை 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    இந்த கருத்து கணிப்பில், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழக அரசியலில் சாதிக்க முடியாது என்ற பரபரப்பான முடிவு தெரியவந்து உள்ளது.

    அரசியலில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் வெற்றி பெறுவார்களா? என்று மக்களிடம் கருத்து கேட்டதில், 51 சதவீதம் பேர் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறி இருக்கிறார்கள்.

    இன்னும் சொல்லப் போனால் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள ரஜினிக்கும், கமல்ஹாசனுக்கும் தமிழக மக்களிடம் 10 சதவீதம் கூட ஆதரவு இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதில் கமலுக்கு அதிக ஆதரவு உள்ளதா? ரஜினிக்கு அதிக ஆதரவு உள்ளதா? என்பதை ‘தந்தி’ டி.வி. துல்லியமாக கணித்துள்ளது. விஜயகாந்த், சீமானுக்கும் நட்சத்திர அந்தஸ்து வரவேற்பு இல்லை.

    சினிமா நடிகர்கள் மீதான மோகம் தமிழ்நாட்டு மக்களிடம் குறைந்து விட்டதை கருத்து கணிப்பு காட்டுகிறது. இந்த நிலையில் மக்கள் மனதில் நிலை பெற்றிருப்பது அ.தி.மு.க.வா? தி.மு.க.வா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்ளகு ‘தந்தி’ டி.வி. கருத்து கணிப்பு விடை தருகிறது.

    அதிரடியான முடிவுகளைக் கொண்ட ‘தந்தி டி.வி.’ கருத்து கணிப்பு இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மக்கள் யார் பக்கம்’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது. #Rajinikanth #KamalHaasan
    Next Story
    ×