search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு
    X

    ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

    ஆர்கே நகரில் எம்எல்ஏ டிடிவி தினகரன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது கற்களை வீசி சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. #RKNagar #TTVDhinakaran
    சென்னை:

    சென்னை ஆர்கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்தார். ஆனால் தினகரன் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தபோது, வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதற்காக 20 ரூபாய் டோக்கன் போல கொடுத்து, தேர்தலுக்கு பின்னர் அதனைக் காட்டி 10 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியதாக புகார் எழுந்தது. 20 ரூபாய் நோட்டை பலர் பத்திரமாக வைத்திருந்து டிடிவி தினகரன் தரப்பில் இருந்து பணம் வரும் என்று பலர் காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

    டிடிவி தினகரன் தொகுதிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வரும்போது இந்த விவகாரம் வெடித்தது. ஏப்ரல் மாதம் ஆர்.கே நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக டிடிவி தினகரன் அங்கு வந்துள்ளார். அவரது வருகையின் போது பொதுமக்கள் பலர் 20 ரூபாய் நோட்டை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில், டிடிவி தினகரன் எம்எல்ஏ இன்று ஆர் கே நகர் தொகுதியில் உள்ள தண்டையார்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தண்டையார்பேட்டையில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். பயனாளிகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

    ஆனால், டிடிவி தினகரன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 ரூபாய் நோட்டுக்களை காட்டி முழக்கமிட்டனர். டிடிவி ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சிலர் வீடுகளுக்குள் இருந்து கற்களை வீசி தாக்கினர். இதனை அடுத்து இரு தரப்பினரும் அங்கு திரண்டதால், திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து துணை ஆணையர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கல்வீசி தாக்கியதில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி எதிர்ப்பாளர்களை கலைத்தனர். எம்எல்ஏ அலுவலகம் அமைந்துள்ள சாலை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பயனாளிகள் தவிர மற்ற யாரும் அந்த வழியாக அனுமதிக்கப்படவில்லை. அதன்பின்னர் எம்எல்ஏ தினகரன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #RKNagar #TTVDhinakaran
    Next Story
    ×